×

குமரி மாவட்டத்தின் சாலை வளைவுகளில் சென்டர் மீடியனாகிய காலி தார் டிரம்கள்: நள்ளிரவில் மோதி விபத்துக்குள்ளாகும் வாகனங்கள்

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் விபத்து அதிகம் நடக்கின்ற சாலை வளைவுகளில் காலி தார் டிரம்களை சென்டர் மீடியனாக காவல்துறை பயன்படுத்தி வருகிறது. ஆனால் அவற்றில் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றன. குமரி மாவட்டத்தில் பெரும்பாலான சாலைகள் ஆக்ரமிப்பால் சுருங்கியுள்ளன. சாலை விபத்துகளும் அதிகம் நடைபெற்று வருகிறது. சாலையின் வளைவுகளில் அடிக்கடி விபத்துக்கு உள்ளாகும் பகுதிகள் நிறைய உள்ளன. தமிழகத்திலேயே கடந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகள் நடைபெற்ற முதல் மாவட்டமாக கன்னியாகுமரி மாவட்டம் இருந்து வருகிறது. மாவட்டத்தில் சாலை விபத்துகள் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. மார்த்தாண்டம், பார்வதிபுரம் பகுதியில் மேம்பாலங்கள் அமைந்துவிட்டால் போக்குவரத்து நெரிசல் குறையும், விபத்துகள் குறையும் என்று எதிர்பார்த்த நிலையில் விபத்துகள் குறைவில்லாமல் தொடர்கிறது.
இந்தநிலையில் மாவட்டத்தில் அதிக அளவில் விபத்துக்கள் நடைபெறுகின்ற சாலை வளைவுகளை போலீசார் கண்டறிந்துள்ளனர்.

இவற்றில் நிரந்தரமாக சாலையை பிரித்து சென்டர் மீடியன் போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும். சாலையின் அகலத்தை அதிகரித்தும் வளைவுகளில் ஏற்பட்டுள்ள சாய்வுநிலையை சரி செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு ஏதும் செய்யவில்லை. மாறாக பழைய காலி தார் டிரம்களை சேகரித்த காவல்துறை அவற்றில் வெள்ளை பெயின்ட் பூசி அவற்றில் ஒரு பகுதியில் மட்டும் சில ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டி சாலை வளைவுகளில் நடு ரோட்டில் வைத்துவிட்டு சென்றுவிடுகின்றனர். இதன் வாயிலாக விபத்துகள் நடைபெறாது என்பது காவல்துறையின் கணிப்பாக இருந்து வருகிறது. ஆனால் அவ்வாறு காவல்துறை சென்டர் மீடியன் அமைத்த இடங்களில் ஒரு இடங்களில் கூட இன்று தார் டிரம்களை காண முடியவில்லை. முதலில் தார் டிரம்களில் வாகனங்கள் மோதுவதால் அவை நகர்ந்து வேறு இடத்திற்கு செல்கிறது. இதனால் அவற்றில் ஒளிரும் பூச்சுகள் இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு சரியாக தெரியாததால் மீண்டும் மீண்டும் டிரம்களின் மீது வாகனங்கள் மோதுகின்றன. குறிப்பாக நாகர்கோவில், கிருஷ்ணன் கோயில் பில்டர் ஹவுஸ் அருகே சாலை வளைவில் இதனை போன்று தார் டிரம்களை காவல்துறை வைத்தது. ஆனால் வைத்த சில நாட்களிலேயே வாகனங்கள் அவற்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகி அனைத்து டிரம்களும் அடித்து செல்லப்பட்டுவிட்டன.

இப்போது ஒரு டிரம் கூட அந்த பகுதியில் இல்லை. இதனை போன்று நாகர்கோவில் - குளச்சல் சாலையில் பாம்பன்விளை வளைவில் 5 தார் டிரம்கள் வைக்கப்பட்ட இடத்தில் தற்போது இரு டிரம்கள் மட்டும் ஒரே இடத்தில் காணப்படுகின்றன. இதர டிரம்கள் அனைத்தும் வாகனங்கள் மோதி தெறித்து சாலையோரத்தில் காணப்படுகின்றன. முதலில் காலி மணல் மூடைகளை இப்பகுதியில் அடுக்கி வைத்து காவல்துறை பரிசோதித்தது. ஆனால் சில நாட்களிலேயே வெப்பத்தின் தாக்கத்தால் அந்த கடல் மணல் மூடைகள் சிதைந்து சிதறியதால் அந்த மணலில் சிக்கி வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வந்தன. இதனை போன்று குழித்துறை முதல் படந்தாலுமூடு வரை செல்லும் சாலை வளைவிலும் காலி தார் டிரம்களை வைத்துள்ளனர். அவற்றில் அடிக்கடி வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றன. நேற்றும் கார் ஒன்று டிரம்களில் மோதி சாலையோரம் இழுத்து செல்லப்பட்டது.

காரில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்தனர். இவ்வாறு காவல்துறை அமைத்துள்ள சென்டர் மீடியன்கள் வாகனங்கள் மோதி பல டிரம்களும் அடித்து செல்லப்பட்டு விட்டன. எஞ்சிய ஓரிரு டிரம்கள் சாலையில் காணப்படுவதால் எதிர்பாராதவிதமாக அவற்றிலும் வாகனங்கள் மோதி வருகின்றன. இதனை போன்று கன்னியாகுமரி சாலையிலும் அமைக்கப்பட்டுள்ள தார் டிரம் சென்டர் மீடியன்கள் விபத்துகளை ஏற்படுத்தி வருகின்றன. விபத்துகளை குறைக்க உருவாக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன்களால் விபத்துகள் புதியதாக நடைபெற்று வருவதாக வாகன ஓட்டுனர்கள் குற்றம்சாட்டுகின்றனர். குமரி மாவட்டத்தில் சாலை விபத்துகள் அதிகரிப்பதை தடுக்க சாலை வளைவுகளில் தேவையான அளவில் சாலையை அகலப்படுத்தி நிரந்தர சென்டர் மீடியன்கள் தேசிய நெடுஞ்சாலைத்துறையால் அமைப்பதுடன் அது தொடர்பாக போக்குவரத்து எச்சரிக்கை சிக்னல்கள் போன்ற வசதிகளை ஏற்படுத்திட வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் எதிர்பார்ப்பு ஆகும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Khalid District Road Trails Center Khader Khar Tar Trims: Midnight Crash Vehicles , Kumari district, road, tar drums, vehicles
× RELATED பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய...